“யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது, அதன் இணைத்தலைவர்களிடம் திகதி கோரப்பட்டு, வழமைபோன்று கூட்டப்படும்.”
– இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு, அந்தக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், மாவட்ட செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் கூட்டுமாறு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், நேற்று (09) கடிதம் மூலம் எனக்கு அறியப்படுத்தியுள்ளார்.
பிரதமரின் இணைப்புச் செயலாளர் என்ற அடிப்படையில், அவர் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியுள்ளார் என்று நான் கருதுகின்றேன்.
எவ்வாறிருப்பினும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரிடம் திகதி கோரப்பட்டு, அதற்கமைவே வழமை போன்று கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், கூட்டம் தொடர்பான அழைப்பிதழ், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கத்துக்கும் அனுப்பப்படும்” – என்றார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment