இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல்! – எம்.ஏ. சுமந்திரன்

20220204 130237

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ச்சியாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்துமீறி நுழையும் மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினருக்கு உத்தரவு விட கோரியும், 2017 ம் ஆண்டின 11ஆம் இலக்க இழுவை மடி தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தும் 2018ம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கோரியும் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் , அதற்கு வடக்கு மீனவ சங்கங்களின் ஆதரவு வேண்டும் எனவும் மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்புகளுக்கு தாம் எப்போதும் பூரண ஆதரவை வழங்குவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version