இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவை, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்தச் சேவை, அதன் பின்னர் லடாக் எல்லைப் பிரச்சினைகளால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்த விமானப் போக்குவரத்துத் தொடக்கம் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உயர் மட்டச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைவில் நேரடி விமானச் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் விமானச் சேவை நேற்று (26ஆம் திகதி) வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. கொல்கத்தா – குவாங்சூ இடையேயான இண்டிகோ (IndiGo) விமானம் நேற்று முதல் இயக்கத்தைத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, ஷாங்காய் – டெல்லி இடையேயான விமானச் சேவை நவம்பர் 9ஆம் திகதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

