இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தனடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்து செய்தன. இதன் காரணமாக, ரஷ்யா மலிவு விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெயை வழங்கியது. இதைப் பயன்படுத்தி இந்தியாவும் அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
எனினும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியையும் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதில் இருந்து இந்தியா ஏற்கெனவே பின்வாங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.