“தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாரத தேசம் எமக்குத் துணை நிற்கவேண்டும். எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் அது நமக்குத் துணை நிற்கவேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுகின்றேன்.”
– இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாங்கள் ஒருபோதும் பாரத தேசத்தின் நலன்களுக்கு முரணாக செயற்படப் போவதில்லை. நாங்கள் பாரத தேசத்தின் உறவுகளாக, தொப்புள்கொடி உறவுகளாக, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களின் பொருளாதாரத்தை – அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தகூடிய ஒரு தரப்பாக இந்தத் தேசத்தில் இருப்போம்.
எம்மைப் பொறுத்தவரை பாரத தேசம் என்பது எமது தந்தையர் நாடு. நாம் தந்தையர் நாடான பாரத தேசத்தை பின்பற்றி செயற்படுகின்றோம்.
தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும். ஆகவே, பண்பாட்டு ரீதியாகவும் பாரத தேசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். எங்கள் அரசியல் கலாசாரத்திலும் பாரத தேசத்தின் அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகின்றோம்.
பாரத தேசத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை பின்பற்றுகின்றவர்களை நினைவுகூருவதைப் போல் இங்கேயும் நாம் அவர்களை நினைவுகூரும் பண்பாட்டை பின்பற்றி வருகின்றோம்.
குறிப்பாக இன்றைய விஜயதசமி நாளில் – அப்துல்கலாமின் நினைவு தினத்தில் பாரத தேசத்துக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். எமது நீண்டகால உரிமைக் கோரிக்கைக்கு பாரத தேசம் செவிசாய்க்க வேண்டும்.
நாம் தென்னிலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கும் எதிரானவர்கள் அல்லர். நாங்கள் மற்றைய இனத்தை அழிப்பதற்காக எமது உரிமையைக் கோரவில்லை. நாங்கள் எம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக – எம்மை வளர்த்துக்கொள்வதற்காக எமக்கு உரிமை வேண்டும் என கடந்த 60 வருடங்களாகப் போராடி வருகின்றோம்.
அந்தவகையில் பாரத தேசம் எமது கோரிக்கையை நியாயமாகப் புரிந்து எமது கோரிக்கைகளை அடைவதற்கு அழுத்தங்களையும் ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன், யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் பிரதம நூலகர் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.