இலங்கைக்கு அவசரகால நிதி உதவியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை (Executive Board) உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ‘விரைவான நிதியளிப்பு கருவி’ (Rapid Financing Instrument – RFI) என்பதன் கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் SDR 150.5 மில்லியன்) நிதி உடனடியாகக் கிடைக்கப்பெறவுள்ளது.
அண்மையில் இலங்கையைப் பாதித்த ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிப்பதற்கும், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால நிதியுதவியானது இலங்கையின் தற்போதைய செலுத்துநிலைப் (Balance of Payments) பிரச்சினையைச் சீர்செய்யவும், பேரழிவிற்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.