அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில், கடந்த 23 ஆம் திகதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வேலைநிறுத்தம் மற்றும் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெற்றது. அமெரிக்க வரலாற்றில் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதலாவது பொது வேலைநிறுத்தம் இது எனக் கருதப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட்டாட்சி முகவர் (Federal Agent) ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட ரேனீ நிக்கோல் குட் (Renee Nicole Good) என்பவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான இலக்காகும்.
மினசோட்டா மாநிலத்திலிருந்து குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரை (ICE) முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் தீவிரமடைந்தது.
உறைபனியை வென்ற உறுதி: மினியாபோலிஸ் நகரில் நிலவிய -30° C க்கும் குறைவான கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர்.
பல தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதுடன், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வணிக நிலையங்கள் மூடப்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
குடியேற்ற அமலாக்கப் பிரிவு (ICE) மாநிலத்தை விட்டு வெளியேறும் வரையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு முறையான நீதி கிடைக்கும் வரையிலும் இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என மினசோட்டா மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.