கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோசடி நபர் தன்னை பிரதி அமைச்சரின் பிரதிநிதி எனப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டு, பொதுமக்களிடம் நிதி உதவி கோருவதாகவும், தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய போலியான கோரிக்கைகளை நம்பி எவருக்கும் பணத்தையோ அல்லது நிதி உதவிகளையோ வழங்க வேண்டாம். அடையாளம் தெரியாத நபர்களிடம் உங்களது வங்கி விபரங்கள் அல்லது இரகசியமான தனிப்பட்ட விபரங்களைப் பகிர வேண்டாம்.
இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திலோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ முறையிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இத்தகைய மோசடிகளில் இருந்து மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக இந்த எச்சரிக்கையை ஏனையோருடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.