தமிழ் இனத்தினுடைய விடுதலைகாக தமது இன்னுயிரை நீத்த மாபெரும் மாவீரர்களை நினைவு கூரும் நாள் இன்று.
சிங்களப் பேரினவாதிகளுடன் போரிட்டு உயிர் நீர்த்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த கார்த்திகை 27ஆம் திகதியை தமிழீழ விடுதலை புலிகளின் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் 02 வது வருடமாக மாவீரர் நாள் கடக்கவுள்ளது.
தாயகத்தைப் பொறுத்தவரை பல பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் நெருக்கடிக்கு மத்தியில் மாவீரர்தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
புகலிட நாடுகளில் மாவீரர் நினைவேந்தலுக்கான தயார்படுத்தல்கள் மும்முரமாக இடம்பெற்றுவருவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கொரோனா தொற்று மீண்டும் வீரியமடைந்துள்ள நிலையில் அதற்குரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
குறிப்பாக நிகழ்வுகளில் பங்கெடுக்க வருபவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிய சான்றிதழ்கள் அல்லது எதிர்மறை சோதனை அறிக்கையுடன் பங்கேற்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாயகத்தில் சில துயிலும் இல்லங்களுக்கு அருகாமையில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது.
எனினும் எந்தவித அச்சமும் இன்றி மரணித்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என ஏற்பாட்டளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இம்முறையும் தடைகளை மீறி எம் மாவீரர்களை மாலை 6.05 மணியளவில் ஈகை சுடர் ஏற்றி நினைவு கூறப்படுமென வடக்குகிழக்கு தமிழர் அமைப்புக்கள் பல தெரிவித்துள்ளன. இந்நிலையில் நீதிமன்றங்களால் பல அரசியல்வாதிகளுக்கு தடைகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment