முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் குறித்து, சுகாதார அமைச்சு உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்ற அமர்வின் போது, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்:
கடந்த டிசம்பர் மாதம் ஒவ்வாமை (Allergy) காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, டிசம்பர் 21 ஆம் திகதி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த மரணம் குறித்து வைத்தியசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் தற்போது சுகாதார அமைச்சுக்குக் கிடைத்துள்ளன.
வைத்தியசாலை ஊழியர்களின் கவனக்குறைவு அல்லது அசமந்த போக்கினால் இந்த மரணம் நிகழ்ந்ததா என்பது குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறுமியின் மரணம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த அமைச்சர், விசாரணை அறிக்கைகளின் முக்கிய விபரங்களை, விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.