‘டிட்வா’ சூறாவளி மற்றும் பேரிடரால் தமது வீடுகள் மற்றும் காணிகளை முழுமையாக இழந்த மக்கள், அவர்கள் விரும்பிய எந்தவொரு மாவட்டத்திலும் குடியேற அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கு வீடமைப்பு மற்றும் காணி கொள்வனவுக்காக ஒரு கோடி ரூபாய் (ரூ. 10,000,000) நிதி அரசாங்கத்தால் வழங்கப்படும்.
பயனாளர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தாமே காணியைத் தெரிவு செய்து கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத் தரவுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் மூலம் கட்டம் கட்டமாக நிதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற வீட்டுத் திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
பேரிடருக்குப் பின்னரான வீடமைப்புப் பணிகளுக்காக மட்டும் குறைநிரப்புப் பிரேரணை மூலம் 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து வீடமைப்புத் திட்டங்களும் எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை மதித்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும் என அமைச்சர் மேலும் உறுதியளித்துள்ளார்.