திட்டமிட்ட குற்றக்கும்பல் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக்காவல் ஜனவரி 15-உடன் நிறைவடைந்த நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம் மேலும் 90 நாட்களுக்கு அனுமதி அளித்தார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர்களைக் கைது செய்யச் சர்வதேச காவல்துறையின் (INTERPOL) ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மத்துகம ஷான், சம்பத் அஷேன், படுவத்தே சாமர மற்றும் டுபாய் சுத்தா ஆகியோருக்கு எதிராக ஆங்கில மொழியில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நான்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். ஏனையோர் பாதுகாப்பு காரணங்களுக்காக ‘ஸூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 6-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.