தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மக்களுடன் சுதந்திரமாகப் பழகுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். மக்களுடன் இருப்பது எனக்கு ஒருபோதும் சோர்வைத் தருவதில்லை; இது அனைவருக்கும் கிடைக்காத ஒரு அரிய பிணைப்பு மற்றும் பழக்கமாகும்.
மக்களின் மனதில் தோன்றும் நம்பிக்கை மற்றும் பாசம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உறவுகளே ஒரு தலைவரின் சகிப்புத்தன்மையையும், சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலையும் வளர்க்கிறது. மக்கள் மத்தியில் இருப்பது எனக்கு உடல் ரீதியான பலத்தையும், மன ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
எப்போதும் தவறாமல் வந்து நலம் விசாரித்து அன்புடன் உரையாடும் என் பிரியமான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் அரசியல் சகாக்களையும் நினைவுகூர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.