வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றது.
இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுத்திட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை, புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வயோதிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, விபத்துக்குள்ளான வயோதிபர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.
இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தடவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற வயோதிபரே மரணமடைந்தார்.
எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியான பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து இடம்பெற்றபோது மரணித்த வயோதிபரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்தது எனவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டது எனவும், இராணுவத்தினரது வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர், உடனடியாக அங்கிருந்து குறித்த வாகனம் சென்றுவிட்டது எனவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews