நாட்டின் தலைநகரான டெல்லியில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுடனான மோதலில் படுகாயமடைந்த தொழிலதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
டெல்லி பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தொழிலதிபர் சிவம் குப்தா, கடந்த ஜனவரி 3ஆம் திகதி டெல்லியின் பிரதான வணிக மையமான ‘கன்னாட் பிளேஸ்’ (Connaught Place) பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த மூன்று உணவு டெலிவரி ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே எதிர்பாராத விதமாகத் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஊழியர்கள் தாங்கள் வைத்திருந்த தலைக்கவசங்களால் (Helmet) சிவம் குப்தாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சுமார் 16 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடிய சிவம் குப்தா, கடந்த ஜனவரி 19ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் டெல்லி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களின் ஆத்திரமும், பொது இடங்களில் ஏற்படும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் இத்தகைய விபரீதங்களுக்குக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.