இந்தியாவினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதைந்த பாகங்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளன.
ஒந்தாச்சிமடம் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், அந்த ஏவுகணைப் பாகத்தைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இது இந்திய விண்வெளி ஆய்வு அல்லது பாதுகாப்பு சோதனைகளின் போது ஏவப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது.
இதேபோன்றதொரு ஏவுகணைப் பாகம் கடந்த மாதம் (டிசம்பர்) 28-ஆம் திகதி திருகோணமலை, சம்பூர் மலைமுந்தல் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியிருந்தது. குறுகிய கால இடைவெளியில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏவுகணைப் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை பாகங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.