யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எதுவித சூழல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு சட்டமூலத்தின்படி, கரையோரத்தை அண்டிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வின் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதற்காகக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டும். ஆனால், மண்டைதீவு கிரிக்கெட் மைதான நிர்மாணத்தில் இவ்வாறான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
இதனால், இந்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த சூழல் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக, மண்டைதீவின் கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை அடியோடு இடைநிறுத்துமாறு குறித்த அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.