கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இன்றைய வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் விலை ஒழுங்கீனம் காரணமாக, இன்றைய நாள் முழுவதும் சந்தை மூடப்பட்டதுடன், காலை முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வர்த்தகங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று பங்குச் சந்தையில் முதல் முறையாக இரண்டாம் நிலை வர்த்தகத்தைத் தொடங்கிய ‘வெல்த் ட்ரஸ்ட் செக்யூரிட்டீஸ்’ (Wealth Trust Securities – WLTH) நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட அசாதாரண விலையேற்றமே இதற்குக் காரணமாகும்.
குறித்த நிறுவனத்தின் பங்கொன்றுக்கான ஆரம்ப விலை ரூ. 7.00 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தகம் தொடங்கியதும் ஒரு பங்கு ரூ. 25,000 என்ற அதீத விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரேயொரு தவறான வர்த்தகத்தின் காரணமாக, பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு (Turnover) சில நிமிடங்களிலேயே 162 பில்லியன் ரூபாயாகக் காட்டியது. இது வழமைக்கு மாறான ஒரு தொகையாகும்.
பங்குச் சந்தை மற்றும் பிணையங்கள் ஆணைக்குழு (SEC) இணைந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளன. இன்று காலை 9.53 மணிக்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமையைக் கருத்திற்கொண்டு இன்று முழுவதுமாகச் சந்தை மூடப்பட்டது.
இன்று காலை முதல் சந்தை நிறுத்தப்படும் வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து ‘ஈக்விட்டி’ (Equity) வர்த்தகங்களும் செல்லுபடியற்றதாக்கப்பட்டு இரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்களால் இன்று காலை 9.00 மணிக்குப் பின்னர் இடப்பட்ட அனைத்து வர்த்தகக் கட்டளைகளும் (Orders) முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
நாளை (08) காலை பங்குச் சந்தை வர்த்தகம் வழமை போல் மீண்டும் தொடங்கும். இன்று அனைத்து ஆர்டர்களும் நீக்கப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் நாளை மீண்டும் தமது வர்த்தகக் கட்டளைகளை (Order Management System – OMS) முறைமைக்குள் புதிதாக உள்ளிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண விலை மாற்றம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கட்டுப்பாட்டு அதிகாரிகளை வெல்த் ட்ரஸ்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.