சீனாவில் வீழ்ச்சியடைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 33 ஆண்டுகளாக கருத்தடை சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கை ரத்து செய்ய சீன அரசு தீர்மானித்துள்ளது.
1980களில் கொண்டு வரப்பட்ட ‘ஒரு குழந்தை திட்டம்’ காரணமாக சீனாவின் பிறப்பு விகிதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைச் சரிசெய்ய 2015-ல் இரண்டு குழந்தைகளும், 2021-ல் மூன்று குழந்தைகளும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இத்தனை தளர்வுகளுக்குப் பின்னரும் பிறப்பு விகிதம் அதிகரிக்காததால், தற்போது ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகளுக்கு 13 சதவீத மதிப்பு கூட்டு வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு அந்நாட்டு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“ஆணுறையின் விலை உயர்த்தப்பட்டாலும், ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு அதைவிட பல மடங்கு அதிகம்” என நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்துவது திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும், பாலியல் ரீதியான நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
33 ஆண்டுகால வரி விலக்கு ரத்து செய்யப்படுவது சீனாவின் மக்கள் தொகை மாற்றத்தில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.