கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட புனரோதயம் எனும் வேலைத்திட்டத்திற்கு யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வலி. கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கோப்பாய் – கைதடி வீதியின் இருமருங்கிலும் உள்ள கருவேல மரங்கள் பைக்கோ இயந்திரங்களைக் கொண்டு அழிக்கப்பட்டு குறித்த பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு மரங்கள் நாட்டப்பட்டன.
இவ்வாறு வீதியின் இருமருங்கிலும் நாட்டப்படுகின்ற மரங்களை பாதுகாப்பதற்காக கொங்றீட் கற்களால் ஒவ்வொரு மரங்களைச் சுற்றியும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல லட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை வலி கிழக்கு பிரதேச செயலகமே தொடர்ச்சியாக பாராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே குறித்த திட்டம் அமைந்துள்ளது.
எனினும் கடந்த இரண்டு வருடங்களாக நடப்பட்ட மரக்கன்றுகள் பாராமரிக்கப்படாததால் பல மரங்கள் அழிந்துள்ளன. அதுமட்டுமின்றி வீதியின் இருமருங்கிலும் மீண்டும் கருவேல மரங்கள் முளைத்து பற்றைக்காடாகி காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியில் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படுகின்றது. பல லட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் பிரதேச செயலகத்தால் பராமரிக்கப்படாமல் பற்றைமண்டி காணப்படுவதால் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment