ஐ.எஸ்.கே அமைப்பின் முக்கிய புள்ளியை வேட்டையாடியது அமெரிக்கா!!
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஐ.எஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், அதில் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு அருகில் வியாழக்கிழமை நடந்த தற்கொலை குண்டுத்தாக்குலை தாங்களே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஐ.எஸ்-கே அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபன்கள் கைப்பற்றிய நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளியேறி வருகின்றனர். விமான நிலையம் அமெரிக்கப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் இந்த விமான நிலையம் மூலமாக சுமார் 1 லட்சம் பேர் வெளியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஓகஸ்ட் 31 ஆம் திகதி தமது படையினர் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடவேண்டும் என்று அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியவர்களை ‘மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம். அவர்களை வேட்டையாடுவோம்’ என்று நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ- பைடன் சூளுரைத்திருந்தார்.
நங்கஹார் மாகாணத்தில் நடந்த இந்த அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“இலக்குவைத்த நபரை கொன்றுவிட்டோம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் யாரும் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை,” என்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைத் தளத்தை சேர்ந்த கேப்டன் பில் அர்பன் கூறியுள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தங்கள் நாட்டவர்கள் விமான நிலையத்தின் வாயிற்கதவில் இருந்து தள்ளி இருக்கும்படி அமெரிக்க அதிகாரிகள் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
Leave a comment