குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள இராணுவப் பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (08) முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார்.
இதேவேளை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தை சந்தித்தது அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் விபத்து நடந்து பகுதிக்கு சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்.
#IndiaNews
Leave a comment