இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து, தற்போதும் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காக 2,500 நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘டித்வா’ சூறாவளியால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்:
2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போதிலும், 17 ஆண்டுகள் கடந்தும் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் வசிப்பது கவலைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீடு கட்டுவதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே நாடு தழுவிய ரீதியில் 31,000 வீடுகளை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.
எனினும், அண்மைய சூறாவளிப் பாதிப்பு காரணமாக மேலும் 20,000 – 25,000 புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கை அரசாங்கமும் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கௌரவமான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதே இந்த அரசின் முதன்மை இலக்கு என ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார்.