மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த 11 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரெனத் தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உதவிகளை வழங்குமாறு உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் (Claudia Sheinbaum) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் மற்றும் சோனோரா மாநில ஆளுநர் அல்போன்சோ (Alfonso) ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.