இந்தியா
நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவு
நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் வசிக்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்காக கடவுச்சீட்டைக் கோரி ஒன்லைன் மூலமாக ஜூன் 12 ஆம் திகதி விண்ணப்பித்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் இருக்க விரும்புவதால், அங்கு செல்வதற்காக கடவுச்சீட்டு ஆன்லைன் மூலமாக ஜூன் 12 ஆம் திகதி விண்ணப்பித்து, ஜூன் 14 ம் திகதி சாலிகிராமத்தில் உள்ள சேவை மையத்தில் நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருவான்மியூரில் தற்போது வசிக்கும் வீட்டிற்கு ஆகஸ்ட் முதலாம் திகதி திருவான்மியூர் பொலிஸார் வருகை தந்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை தமக்கான கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை என நளினி தெரிவித்துள்ளார்.
எனவே, பொலிஸார் சரிபார்த்த விபரங்களை கடவுச்சீட்டு அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும், தனக்கான கடவுச்சீட்டை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி நளினியின் கடவுசீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.