“தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை.”
– இவ்வாறு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்ட அ.தி.மு.க. புறநகர் அலுவலகத்தில் அ.தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுபாய் சென்றபோது அவருடன் துறை செயலாளர்கள் செல்லவில்லை, துறை அமைச்சர்கள் செல்லவில்லை. மு.க.ஸ்டாலின் குடும்பமே டுபாய்க்கு சென்றுள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அவர் அங்கு செல்லவில்லை, டுபாய்க்குச் சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்துக்காக தான் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக புதிய தொழில் தொடங்குவதற்காக அங்கு சென்றுள்ளனர் என்று மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது.
நான் வெளிநாடு சென்றபோது சாதாரண விமானத்தில்தான் பயணம் செய்தேன். என்னுடன் அந்தந்த துறைகளுடைய அமைச்சர்கள், செயலாளர்கள் வந்தார்கள்.
இதை அமைச்சர்கள் சுற்றுலா என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். வேண்டும் என்றே திட்டமிட்டு எங்கள் மீது அவதூறு பரப்பினார்.
நாங்கள் உண்மையிலேயே பல திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்றோம்.
நாங்கள் அரச பணத்தை வீணடிக்கவில்லை. ஆகவே, இவர்கள் குடும்ப சுற்றுலா போவதற்காக டுபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைக்கும் போர்வையில் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டது” – என்றார்.
#IndianNews #tamilnaduNews
1 Comment