2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் ‘குடிமக்கள் சக்தி’ (Puravesi Balaya) ஆகிய தரப்பினருக்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மில்லியன் கணக்கில் பணம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகக் கையாளப்பட்ட அரசியல் வியூகம் குறித்து அவர் பின்வருமாறு விளக்கினார்:
நாங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் நிதி வழங்கினோம். ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியது சிறிய தொகையல்ல, அது மில்லியன் கணக்கான ரூபாய்கள்.
ன்று மூன்று பிரதான சக்திகள் இணைந்து செயற்பட்டன மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஒரு தளம். சிவில் சமூக அமைப்புகள் ஊடாக மகிந்த ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.
ஜே.வி.பி (JVP) மற்றுமொரு முனையில் ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இந்த மும்முனைத் தாக்குதலினாலேயே மகிந்த ராஜபக்ச அன்று தோற்கடிக்கப்பட்டார் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் காலங்களில் கட்சிகளுக்கு இடையே அல்லது இயக்கங்களுக்கு இடையே பரிமாறப்படும் நிதியுதவிகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஒருவரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெளிப்படுத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்விதப் பதிலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.