கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா (Anke Gowda), புத்தகங்கள் மீதான தனது தீராத காதலால் இன்று இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கவுடா, சிறுவயதில் உணவிற்காகத் தந்தை கொடுத்த பணத்தைச் சேமித்துப் புத்தகங்களை வாங்கத் தொடங்கினார்.
பேருந்து நடத்துனராகப் பணியாற்றியவர், பின்னர் கன்னட மொழியில் முதுகலை பட்டம் பெற்று, சர்க்கரை ஆலை ஒன்றில் நேரக் காப்பாளராக (Time Keeper) இணைந்தார்.
தனது 33 ஆண்டுகாலப் பணியில், மாதச் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கை (2/3) புத்தகங்கள் வாங்கவே செலவிட்டுள்ளார். எஞ்சிய சிறு தொகையிலேயே குடும்பத்தை வழிநடத்தியுள்ளார்.
சுமார் 15,800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இவரது நூலகத்தில், பைபிளின் அரிய பிரதிகள் முதல் அனைத்துத் துறை சார்ந்த 20 இலட்சம் புத்தகங்கள் உள்ளன.
இங்கு முறையான நூலகர்கள் இல்லை, புத்தகங்கள் குவியலாகக் கிடந்தாலும், எந்தப் புத்தகம் எங்குள்ளது என்பதை கவுடா மிகச்சரியாகக் கூறிவிடுவார் என்பது வாசகர்களின் ஆச்சரியம்.
கல்வி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்தியதற்காக இந்திய அரசு இவருக்குச் சமீபத்தில் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
இடப்பற்றாக்குறை ஏற்பட்ட போது, தொழிலதிபர் ஹரி கோடே ஒரு பெரிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியின் நிதியுதவியுடன் மேலும் இரு கட்டடங்கள் இதனுடன் இணைக்கப்பட்டன.
நான் எனது கடமையைச் செய்துவிட்டேன். இனி இந்த நூலகத்தைப் பாதுகாப்பது அரசு மற்றும் பொதுமக்களின் பொறுப்பு.” – அன்கே கவுடா