சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வர முடிந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் (F.U. Woodler) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு முதல் இதுவரை, சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட கடத்தி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
இன்று (27) அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பொடி லெசி’ (Bodi Lassie) உள்ளிட்ட 14 பேர் சர்வதேச பொலிஸ் அறிவித்தல் ஏதுமின்றி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சிவப்பு அறிவித்தல் இல்லாத சந்தேக நபர்களை அழைத்து வருவதற்காக, அந்தந்த நாடுகளின் குடிவரவு குற்றங்கள் மற்றும் நாடுகடத்தல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொலிஸ் மா அதிபரின் (IGP) நேரடித் தலையீடு மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பின் மீது வெளிநாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை முக்கிய பங்காற்றியுள்ளதாக வுட்லர் சுட்டிக்காட்டினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இந்தக் குற்றவாளிகள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.