13ஆவது திருத்தம் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது! – உறுதியாக உள்ளோம் என்கிறார் மாவை

20220128 104403

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஸ்டி கட்டமைப்பில், சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். ஒரு நாளும் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது. அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது. நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம்.

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்துவிட்டோம். அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம். தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version