இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்தவும் அமைச்சரவை இன்று (27) கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இணைய வழியில் சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சைபர் மிரட்டல்களைக் (Cyber Bullying) கையாளத் தனித்துவமான புதிய சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்திற்கு (UNCRC) அமைய, இலங்கையிலுள்ள அனைத்துச் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளை உறுதிப்படுத்த ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ எனும் பெயரில் புதிய சட்டம் அறிமுகமாகும்.
தற்போது நடைமுறையிலுள்ள 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, நவீன காலத் தேவைகளுக்கு ஏற்பப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப் பாதுகாப்பை வழங்கும் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படும்.
அநாதை சிறுவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற சிறுவர்களைப் பராமரிக்கும் ‘வளர்ப்புப் பெற்றோர்’ (Foster Care) முறைமையை முறைப்படுத்தப் புதிய சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான காலாவதியான சட்டப்பிரிவுகளை நவீனமயப்படுத்தப் பின்வரும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன:
1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டம்: சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டம்.
1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டம்: சிறுவர் தத்தெடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டம்.
1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டம்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டம்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகள், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.