பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
எழுத்தாளர் கல்கியின், பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு.
தனது கனவை நனவாக்கும் பணிகளை இயக்குநர் மணிரத்னம் விறுவிறுப்பாகவும் மும்முரமாகவும் முன்னெடுத்து வந்தார்.
இத் திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில், ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்புக்கள் தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்நிலையில், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் ஓர்சா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்றன.
சில மாதங்களுக்கு முன்னர் தான், படத்தின் ரிலீஸ் குறித்து பிரமாண்ட போஸ்டருடன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதனை, புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ள படக்குழு வரும் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் இந்திய மதிப்பின் படி ரூபா 800 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment