இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான கிறிஸ் சில்வர்வுட்(Chris Silverwood) பதவி விலகியுள்ளார்.
எனவே, பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படும் வரை சனத் ஜயசூரிய இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையேயான ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் போட்டிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய செயற்படுவார் என கூறப்பட்டுள்ளது.
சனத் ஜெயசூரிய தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிறிஸ் ரோஜர்ஸை நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ் ரோஜர்ஸுடனுடனும்(Chris Rogers) மேலும் இரண்டு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடனும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான 46 வயதுடைய கிறிஸ் ரோஜர்ஸ் தற்போது விக்டோரியா மாநில அணிக்குப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.