நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டூட்’ (Dude) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சுதா கொங்கராவிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், சக நடிகர் சரத்குமார் குறித்துப் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “முதன்முறை சரத்குமாரைப் பார்த்தபோது, ‘சார் உங்கள் வயது என்ன?’ என்று கேட்டேன். அவர் சொன்னவுடன் ஆடிப்போய்விட்டேன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பேன்’ என்றார். அன்று முதல் இன்றுவரை நான் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருகிறேன். சரத்குமார் வயது வரும்போது, நான் அவரைப் போன்று உறுதியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.