நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒளிபரப்பு இன்று ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேடையில் பேசிய விஜய், இப்படம் உருவான விதம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
2023-லேயே இந்தப் படம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அப்போதே நான் அரசியலில் நுழையப்போவதாக முடிவு செய்துவிட்டேன். இதனைத் தயாரிப்பாளரிடமும் (KVN Productions) வெளிப்படையாகக் கூறினேன்.
“சும்மாவே என் படங்களுக்குப் பல பிரச்சினைகள் வரும். இப்போது நான் முழுநேர அரசியலில் இறங்குவதால், இன்னும் அதிகமான எதிர்ப்புகள் வரலாம்; இது உங்களுக்குச் சம்மதமா? எனத் தயாரிப்பாளரிடம் கேட்டேன். ஆனால் அவர் தயக்கமின்றி பாசிட்டிவ் ஆகப் பதிலளித்ததால்தான் இந்தப் படம் சாத்தியமானது” என விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இயக்குநர் எச்.வினோத் குறித்துப் பேசுகையில், “அவருடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பண்ண வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இறுதியில் ‘ஜனநாயகன்’ மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
மலேசிய மக்களின் அன்பு குறித்தும், தனது அரசியல் பயணம் குறித்தும் விஜய் ஆற்றிய உரை, இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பொங்கல் வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதனால் இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.