இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது, அங்குள்ள சட்டங்கள் காரணமாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாகவும், இந்தியாவில் நிலைமை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கீர்த்தி சுரேஷிடம் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்புக் குறைவாகத்தான் இருக்கிறது. துபாய், அமெரிக்காவைப் போன்ற பாதுகாப்பு இங்கு இல்லை. துபாய் செல்லும்போது பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. அங்கிருக்கும் சட்டம் அதுமாதிரி இருக்கிறது. இங்கேயும் கண்டிப்பாக அது போன்று மாறித்தான் ஆக வேண்டும்,” என்றார்.
தற்போதுள்ள தொழில்நுட்பம் குறித்துப் பேசிய அவர், டீப்-ஃபேக் (Deep-Fake) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மூலம் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவது குறித்துக் கவலையை வெளிப்படுத்தினார்:
“நான் ட்விட்டர் பக்கமே செல்வதில்லை. எதிர்மறையான கருத்துகளைத் தவிர்த்து வருகின்றேன். AI பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மனிதர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மனிதர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.”
“சமூக ஊடகங்களில் பார்க்கும்போது நான் இது போன்று உடை அணிந்தேனா? என்று எனக்கே கேள்வி எழும். அந்த அளவுக்குப் புகைப்படங்களை அசல் போன்று AI உருவாக்குகிறது. ‘உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா’ எனக் கேட்கத் தோன்றும். அவர்கள் இதையேதான் வேலையாக வைத்துள்ளார்கள் என்றால் என்ன செய்ய முடியும்? வாழு, வாழ விடு.”
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு நெருக்கமாக உள்ள திரைத்துறை மூலம் பெண்கள் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.