காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியதற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அது அவரது தனிப்பட்ட கருத்து என திரிணமூல் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.
இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் (தன்பாலின உறவாளர்கள்) பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இணையத்தில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.
மொய்த்ரா பேச்சு
இந்தச் சூழலில் இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில் 2020 செப்டம்பரில், துர்கா போல் வேடமணிந்து போட்டோ ஷூட் நடத்தியதற்காக நுஷ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் அவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறினார்.
இதே நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் மற்றொரு எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என்னை பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான். தெய்வத்தை கற்பனை செய்து கொள்ள சுதந்திரம் இருக்கிறது. சில இடங்களில் கடவுள்களுக்கு விஸ்கி வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று மது பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் அவர்கள் அதை நிந்தனை என்று கூறி முகம்சுளிப்பார்கள். வேறு சில இடங்களில் அது தெய்வத்துக்கு எதிரானதாக உள்ளது. எனவே உங்கள் தெய்வத்துக்கு என்ன தர வேண்டும் என்பதை பக்தர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.
டவிட்டரில் ‘சண்டை’
இந்த விவகாரம் மேற்குவங்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. காளி குறித்து பேசிய சர்ச்சைப் பேச்சு குறித்து பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘அனைத்து சங்கிகளுக்கும் சொல்வது என்னவென்றால், பொய் சொல்வதாலேயே உங்களை சிறந்த இந்துக்களாக காட்டிக் கொள்ள முடியாது. நான் எந்தப் படத்தையோ அல்லது போஸ்டரையோ ஆதரிக்கவில்லை. புகைபிடித்தல் என்ற வார்த்தையையும் நான் எப்போதும் குறிப்பிடவில்லை. தாராபீடத்தில் உள்ள எனது மா காளியை சென்று பார்வையிடுங்கள். அவருக்கு என்ன உணவு & பானங்கள் வழங்கப்படுகின்றன என்பது தெரியும்.
ஜெய் மா தாரா’’ எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மொய்த்ரா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சியான பாஜகவினர் கடுமையான பதிவுகளை வெளியிட்டனர். இதற்கு போட்டியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்தனர். இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் கருத்து தனிப்பட்ட கருத்து என்றும், அதில் கட்சிக்கு உடன்பாடில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. இதுமட்டுமின்றி காளி குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் கண்டத்துக்குரியது என்றும் திரிணமூல் காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தை மஹுவா பின் தொடர்ந்து வந்த நிலையில் அதனை ‘அன்பாலோ’ செய்யுமாறு கட்சி உத்தரவிட்டது. அதனை ஏற்று அவர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார்.
#CinemaNews
Leave a comment