’அரண்மனை’ போலவே இன்னொரு 3ஆம் பாக திரைப்படம்.. சுந்தர் சியின் மாஸ் திட்டம்..!
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் தொடர்ச்சியாக வெளியானது என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகமும் உருவாகியுள்ளது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’அரண்மனை’ போலவே ’கலகலப்பு’ திரைப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் வெளியான நிலையில் அடுத்ததாக மூன்றாம் பாகத்தை இயக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான திரைக்கதை எழுதும் பணியை தற்போது தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
’கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், சிவா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ஜீவா, ஜெய் நடித்தனர். மூன்றாம் பாகத்தில் கவின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ‘லவ் டுடே’ நாயகி இவானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.