துபாய் ஆட்டோட்ரோமில் (Dubai Autodrome) நடைபெற்று வரும் புகழ்பெற்ற ‘துபாய் 24 ஹவர்ஸ்’ (Dubai 24 Hours) கார் பந்தயத்தின் போது, நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணியைச் சேர்ந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘துபாய் 24 ஹவர்ஸ்’ சர்வதேச கார் பந்தயத்தில் நேற்று (17) ‘அஜித்குமார் ரேஸிங்’ (Ajith Kumar Racing) அணியின் கார் களமிறங்கியது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அயர்டன் ரெடாண்ட் (Ayrton Redant) என்பவர் அஜித்தின் அணியின் சார்பில் காரைச் செலுத்திச் சென்றார். ஓடுதளத்தில் கார் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தபோது, இயந்திரப் பகுதியில் (Engine) ஏற்பட்ட கோளாறு காரணமாகத் திடீரென கரும்புகை வெளியேறி கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
கார் தீப்பிடித்ததை நொடிப் பொழுதில் உணர்ந்த வீரர் அயர்டன் ரெடாண்ட், மிகுந்த சாதுரியமாகச் செயல்பட்டு காரை ஓடுதளத்தின் ஓரமாக நிறுத்திவிட்டு, தீ பரவுவதற்கு முன்பே வெளியே குதித்தார். இதனால் அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் தீயை அணைத்த போதிலும், கார் பலத்த சேதமடைந்தது.
தனது ரேஸிங் அணியை உற்சாகப்படுத்தவும், போட்டிகளை நேரில் பார்வையிடவும் நடிகர் அஜித்குமார் ஏற்கனவே துபாய் சென்றுள்ளார். கடந்த ஆண்டு பயிற்சியின் போது அஜித்தின் கார் விபத்துக்குள்ளான நிலையில், தற்போது அவரது அணியின் கார் தீப்பிடித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதியடைந்துள்ளனர்.