இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – இந்திய தூதரகம் அறிவிப்பு
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசால் புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டப் பின்படிப்பு அல்லது கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத் தகவலை இந்திய உயர் தூதரகம் அறிவித்துள்ளது.
முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள், தங்குமிட கொடுப்பனவு மற்றும் வருடாந்த உதவித்தொகை என்பவற்றை உள்ளடக்கி இந்த புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படுகின்றது.
இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமைய திறமை வாய்ந்த இலங்கை மாணவர்களை தெரிவுசெய்து இந்த புலமைப் பரிசில்கள் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் www.mohe.gov.lk. எனும் இணையதளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.