721187541parliamnet5
அரசியல்கட்டுரை

பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!

Share

பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன.

இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் களமிறங்கியிருந்தார். அவர் தலைமையிலான குழுவில் எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, எரான் விக்கிரமரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை வெகு விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசுமீது நம்பிக்கையில்லை என்பதால் அனைத்து எம்.பிக்களும் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், இதற்கு தேவையான அழுத்தங்களை மக்கள் பிரயோகிக்க வேண்டும் எனவும் சஜித் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, இன்றைய தினமே, இவற்றை சபாநாயகர் விவாதத்துக்கு எடுக்கலாம் என எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்பட்டால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என சஜித் அணி எம்.பிக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப் பிரேரணை மூலமே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும், அப்படியானால் எதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற வினாவுக்கு, “ ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும், அதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.” என பதிலளித்தார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பிரதமர் மஹிந்த வீடு செல்ல நேரிடும். எனினும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் ஜனாதிபதியின் பதவிக்கு எவ்வித அச்சுறுத்தலும் வராது. ஆனால் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்தவராக அவர் கருதப்படுவார். இது ஜனாதிபதிக்கு உளவியல் ரீதியில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கப்படுகின்றது.

🛑 நாடாளுமன்றம் கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் விசேட கட்சி தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது .
இதன்போது இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட மேலும் சில விடயங்கள் குறித்து ஆராயப்படும். அவற்றை எப்போது விவாதத்துக்கு உட்படுத்துவது என்பது சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்படும்.

பிரதி சபாநாயகரின் இராஜினாமாகக் கடிதத்தை ஏற்றுவிட்டதாக ஜனாதிபதி, நாடாளுமன்றத்துக்கு இன்னும் தெரியப்படுத்தப்படாததால், அதற்கான தேர்வு, இன்று நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது சம்பந்தமாக ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம்.

இதற்கிடையில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என நேற்று தகவல் வெளியாகிருந்தாலும், பதவி விலகபோவதில்லை என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுத்தாலும், அது பதவி விலகலுக்கான அறிவிப்பாக இருக்காது என்பதே பிரதமரின் கருத்தாக உள்ளது.

ஜனாதிபதி கோரினால் மாத்திரமே தான் பதவி விலகுவார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இதனால் பிரதமர் பதவி குறித்த இழுபறி நிலை நீடிக்கின்றது.

🛑 இடைக்கால அரசு – சஜித் அணி மறுப்பு! 11 கட்சிகள் நிபந்தனை

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்றது.

தேசிய இணக்கப்பாட்டு அரசை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் –

சுயாதீன அணிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மமன்பில, தயாசிறி ஜயசேகர, டிரான் அலஸ், நிமல் லான்சா ஆகியோர் பங்கேற்றனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை, பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும்வரை, இடைக்கால அரசில் இணைவது ஏற்புடைய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்கலாம் என்பது குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு மீண்டும் இடம்பெறவுள்ளது.

எனினும், தேசிய இணக்கப்பாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கினால் மட்டுமே, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு என்ற நிபந்தனை சுயாதீன அணிகளின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமது கட்சி ஆதரிக்காது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 5
கட்டுரை

பூமியின் நீர் எங்கிருந்து வந்தது? 50 ஆண்டு கால நிலவு மண் மாதிரிகள் மூலம் நாசா வெளிப்படுத்திய புதிய உண்மை!

பூமியில் உள்ள பெரும்பாலான நீர், இந்த கிரகம் உருவான ஆரம்பகால கட்டுமானப் பொருட்களிலிருந்தே (Initial Building...

25 6801f2f214a5e
கட்டுரை

இரண்டு துண்டுகளாகப் பிரியும் ஆபிரிக்கா: மில்லியன் கணக்கான ஆண்டுகளில் உருவாகும் புதிய சமுத்திரம்!

ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான நிலவியல் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாகவும், ஒரு பாரிய பிளவின் மூலம்...

ntitled Design 2026 01 05T134854.170
கட்டுரைவிஞ்ஞானம்

பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி அழியுமா? கருப்பு ஆற்றல் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிரடித் தகவல்!

தற்போது பிரபஞ்சம் விரிவடைவதற்குக் காரணமாக இருக்கும் ‘கருப்பு ஆற்றல்’ (Dark Energy) எதிர்காலத்தில் வலுவிழக்கக்கூடும் என்றும்,...

celestialevent 1735297800
விஞ்ஞானம்கட்டுரை

விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: நாளை அதிகாலை வானில் விண்கல் மழை; இன்று ‘சுப்பர் மூன்’!

2026-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வானில் பல விசேட நிகழ்வுகள் அரங்கேறவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்திய...