சிவனொளிபாதமலை – Adam’s Peak – Sri Pada

இரத்தினபுரிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிவனொளிபாதமலை.
இங்கு சிவபெருமானின் 0.55 மீற்றர் (1.8 அடி) நீளமான பாதம் பதிந்துள்ளதாகக் கருதி இந்து மக்கள் ‘சிவனொளிபாதமலை’ எனவும்¸ புத்தரின் கால்தடம் பதிந்துள்ளதாகக் கருதி ‘ஸ்ரீபாத’ என்று பௌத்தர்களும்¸ ஆதாம் (அலை) கால்தடம் பதிந்துள்ளதால்¸ ‘ஆதாம் மலை’ என்று முஸ்லிம்களும்¸ உலகில் முதல் மனிதனாகிய ஆதாமின் கால்சுவடு பதிந்துள்ளதால் கிறிஸ்தவர்கள்‘அடம்ஸ் பீக்’ என்றும் அவரவர் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.
இதனால் சர்வமதங்களின் ஒற்றுமைச் சின்னமாகவும் இந்தமலை திகழ்கின்றது.
321097735 914203786618416 6503272876465964128 n
கொழும்பிலிருந்து ஹட்டன் செல்லும் வீதியில் உள்ள கினிகத் தேனையை அடுத்து வரும் கரோலினா சந்தியிலிருந்து தெற்கு நோக்கி நோட்டன் பிரிட்ஜ்¸லக்சபான¸மவுசாக்கல ஊடாக நல்லதண்ணி எனும் மலையடிவாரம் வரை ஓர் பாதை செல்கிறது. இங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்ல வேண்டும். இதுவே சிவனொளிபாத மலைக்கு செல்லக் கூடிய இலகுவான பாதையாகும்.
இன்னுமோர் வழியும் இம்மலைக்குச் செல்வதற்கு உள்ளது. கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள குருவிட்ட என்னுமிடத்திலிருந்து கிழக்கு நோக்கி எக்னெலிகொட¸ எம்புல்தெனிய¸குருளுவான ஊடாக பாலபெத்தலே என்னுமிடத்தை அடைந்து அங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்வதாகும்.
சிவனொளிபாதமலையின் யாத்திரைக்கான பருவ காலம் ஆரம்பிக்கும் காலப்பகுதியில் மலையகம் எங்கும் வண்ணத்துப்பூச்சிகள் அலை அலையாகப் பறந்து திரிகின்றன. இவை அனைத்தும் சிவனொளி பாத மலைக்குச் சென்று இறைவனைச் தரிசிப்பதாக நம்பப்படுகின்றது.
மலை உச்சியை நோக்கிப் படிகள் வழியே ஏறிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் விகாரைகள் கட்டப்பட்டுள்ளதுடன் அவசர தேவைகருதி வைத்திய முகாம்களும் முதலுதவி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரவு மலை ஏற ஆரம்பித்தால்¸ அதிகாலை வேளையில் மலை உச்சியைச் சென்றடைந்து¸ இறைவனின் பாதங்களைத் தரிசித்துவிட்டு சூரியன் உதிக்கும் உன்னதமான காட்சியை பார்க்க முடியும். சிங்களவர்களின் சம்பிரதாயத்துக்கு அமைய மத்தளம் அடித்து¸முரசு கொட்டி சூரிய பகவானுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
இயற்கை அன்னையின் பிறப்பிடமான மலைநாட்டின் அற்புதமான எழில் கொஞ்சும் காட்சியைக் காண்பதற்கு சிவனொளிபாதமலையே சிறந்த இடமாகும். இந்த மலையிலிருந்து கொழும்பு¸ பேருவளை மற்றும் கலங்கரை விளக்கங்களைக் காண்பதோடு¸ சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் கண்குளிரக் காணமுடியும்.
இலங்கையின் மிக நீளமான மகாவலி கங்கை¸ களுகங்கை¸ களனிகங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பது இந்த மலையிலிருந்துதான்.
டிசம்பர் முதல் மே வரை யாத்திரைகாலமாக கருதப்படுகிறது. உச்ச யாத்திரை பருவமாக ஏப்ரல் மாதம் உள்ளது.கொட்டும் பனித்துளிகள் உடம்பில் பட்டு சில்லிடும்போது குளிர்காற்றில் மழைச்சாரல் தூவானமாக சிந்திக்கொண்டிருக்கும் காலத்தில் மலை ஏறுவதும் ஒரு சுவாரஷ்யம்.
#Histry
Exit mobile version