தமிழர்களுக்காக குரல் கொடுங்கள்: இந்தியாவிடம் கோரிக்கை
இந்தியாவின் அரண் தமிழர்கள் தான். இனியாவது எங்களுக்காக குரல் கொடுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ். தாவடி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு நீதிபதி எமது நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். ஒரு நாட்டினை விட்டு நீதிபதி வெளியேறுகின்றார் என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கப் போகின்றது.
இந்த விடயம் தொடர்பான முழு பொறுப்பினையும் இந்த அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கமோ அல்லது நீதி அமைச்சோ இதுவரை இதற்கு காரணமாக இருக்கின்ற தரப்பிற்க்கு எதிராகவும் ஒரு நடவடிக்கையை கூட முன்னெடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் ஒரு பேசுபவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றது. எதையும் பேசலாம் ஆனால் அவர்கள் பேசுவதை அனைத்தையும் ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.
இதன் மூலம் குறித்த பேச்சுக்களை பேசுபவர் தூண்டி விடுகின்றார். முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு அனைவருக்கும் தெரியும் . இவருடைய பேச்சு மற்றவர்களை தூண்டிவிடும் இதனை பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நினைக்கவில்லை.
இவ்வாறு தூண்டப்பட்டவர்கள் தான் அந்த நீதிபதியை விரட்டி இருக்கலாம் தன்னுடைய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர் வெளியேறியுள்ளார். நான் இங்கே சொல்ல வருவது இலங்கையில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளினதும் தீர்ப்புக்களுக்கும் இந்த அரசாங்கம் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும்.
ஒருவருடைய தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லாவிடில் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.என்ற ஜனநாயக ரீதியான முறைகளை விடுத்து பலவந்தமாக வெருட்டி இந்த பெரும்பான்மையினம் சிந்திக்கின்றது.
தமிழ் மக்களின் எந்தவிதமான கூட்டும் தேவையில்லை என்று கோட்டாபய ராஜபக்ச எவ்வாறு தமிழ் மக்களுடைய வாக்கு தேவையில்லை என்பதனை சுட்டிக்காட்டினரோ அதே பாணிக்கு தற்போதைய ஜனாதிபதி செல்வதாக தெரிகிறது.
அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையை பார்த்தாலும் இது புலப்படுகிறது. உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அழைத்து தன்னுடைய நியாயங்களை சொல்கிறாரே தவிர அவர்களுடைய நியாயங்களை கேட்பதாக இல்லை. அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? இதற்கு சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டு பேசாமல் தான் இருக்கின்றது.
நிச்சயமாக இந்தியா விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். வேறு யாராலும் முடியாது.
நிச்சயமாக பெரும்பான்மை இனம் என்றுமே இந்தியாவிற்கு சார்பாக வரமாட்டார்கள் என்பதனை எடுத்துக் கூறுகின்றேன். இந்தியாவிற்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றேன்.
இங்கே உங்களுக்கு சார்பாக இருக்கக்கூடியவர்களில் தமிழர்கள் தான். பின்பு தான் மற்றவர்கள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களுக்கு ஒரு நீதி நியாயமான வழி பிறக்க வேண்டும். தற்பொழுது எங்களுக்கு இருந்த பாதுகாப்பு 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்டு விட்டது.
இதற்குப் பின்னர் தாங்கள் நினைத்தவாறு பெரும்பான்மை இனத்தவர்கள் தமிழர்களை துச்சமாக மதிக்கின்றார்கள்.
இந்தியாவில் தமிழகம் நமக்காக நிற்கின்றது. ஆனால் முழு இந்தியாவும் நமக்காக நிற்கின்ற பொழுது தான் நாங்களும் அவர்களுக்கான முழு ஆதரவினையும் வழங்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.