வேகமாக பரவும் டெல்டா ! – சந்திம எச்சரிக்கை
நாட்டில் டெல்டா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என
ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவல் நிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானோர் டெல்டா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால், சமூகத்தில் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை உள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது இவ்வாறு குறைவடைந்து செல்கிறது என்பதற்காக நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது என எண்ணுவது தவறானதாகும்.
நாட்டில் தற்போது டெல்டா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருகின்றது. தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் 95.8 வீதமானோர் புதிய டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கும் வரை வைரஸ் பரவல் அதிகரித்தே செல்லும், இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தொற்றிலிருந்து முழுமையாக விடுபடுவது சவாலான விடயமாகும்.
மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன் தம்மையும் தமது சமுகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் – என்றார்.
Leave a comment