இலங்கை
இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவையுங்கள்
இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறும், அதன்மூலம் உரியவாறு ஆதாரங்கள் திரட்டப்படுவதையும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் எட்டப்படுவதையும் உறுதிப்படுத்துமாறும் தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழு அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில் செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனிதப்புதைகுழிகள் குறித்தும், அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன்போது ஏற்பட்ட தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின்போது முன்னாள் பாதுகாப்புச்செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அங்கம்வகிக்கும் ‘தமிழர்களுக்கான பிரித்தானிய பாராளுமன்றக்குழு’ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டமையை பெரிதும் வரவேற்கின்றோம்.
அதேவேளை உரியவாறு ஆதாரங்கள் திரட்டப்படுவதையும், பொறுப்புக்கூறலை நோக்கி முன்னேற்றம் அடையப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.
இவ்வறிக்கையானது இலங்கையில் 1983 – 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான மனிதப்புதைகுழிகளை அகழ்வதில் இலங்கை அடைந்திருக்கும் தோல்வியைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி விசாரணை செயன்முறைகளில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான தலையீடு குறித்தும் இவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மனிதப்புதைகுழிகளின் வரலாறு என்பது அரசியல் தலையீடுகள், தடைகள், தீர்வைக் கண்டடைவதற்கான அரசியல் ரீதியான முனைப்பின்மை ஆகியவற்றுடன் தொடர்புபட்டிருக்கின்றது. அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களைப் பொறுத்தமட்டில், இது தீர்க்கப்படாதவொரு துன்பியல் சம்பவம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login