உலகம்
சிவப்புக் கோட்டை தாண்டாதீர்! – அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்தால் அது ‘சிவப்புக் கோட்டை’ தாண்டுவதாக இருக்கும் என்றும் (அமெரிக்காவை) உக்ரைன் மோதலில் ஈடுபடும் தரப்பாக கருத வேண்டி இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
‘ரஷ்யா தனது ஆட்புலங்களை பாதுகாக்கும் உரிமையை பெற்றுள்ளது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உக்ரைனுக்கு மேம்பட்ட வழிகாட்டல் ரொக்கெட் அமைப்பின் ரொக்கெட்டுகளை வெளிப்படையாக வழங்குகிறது. இது 80 கிலோ மீற்றருக்கு அப்பால் தாக்கக்கூடியதாக உள்ளது. எனினும் அமெரிக்க ரொக்கெட்டுகளால் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதில்லை என்று உக்ரைன் உறுதி அளித்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த ஏவு முறை மூலம் 300 கிலோமீற்றர் தூரம் வரை ஏவுகணைகளை வீச முடியும். உக்ரைனிடம் அவ்வாறான ஏவுகணை இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
எனினும் உக்ரைன் கட்டுப்பாட்டு நிலப்பகுதியில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ரஷ்ய விமானத் தளம் மீது கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் பற்றிய விளக்கம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும் கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்ய துருப்புகளை எதிர்ப்பதற்கு பெரும் அளவு ஆயுத உதவியை அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் கோரி வருகிறது.
உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் புதிய இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா கடந்த மாதம் உறுதி அளித்தது. இதன்மூலம் அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்கும் பாதுகாப்பு உதவிகள் 10.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.
#world
You must be logged in to post a comment Login