செய்திகள்
அதிகவிலைக்கு பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – அரசு எச்சரிக்கை
நிர்ணய விலையை விட அதிகவிலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அரிசி மற்றும் சீனியின் விலை வெகுவாக அதிகரித்திருக்கின்ற நிலையில், இதற்கான தீர்வு குறித்து தெளிவுபடுத்துகின்ற வகையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனியின் விலை ஏற்றத்துக்கு சீனி இறக்குமதியாளர்கள் பல காரணங்கள் கூறினாலும், அவை ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. ஒரு கிலோ கிராம் சீனியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்வதென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலே அவர்கள் சீனிக்கு அதிக விலையை நிர்ணயித்திருக்கின்றார்கள்.
எமது அமைச்சுடன் வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இணைந்து நடைமுறை சட்டங்களுக்கு அமைவாக இவ்வாறான மிதமிஞ்சிய விலையுயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login