ஏனையவை
நாடாளுமன்றை பாதுகாக பதிலடி! – கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியல்ல இந்த தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.
” பதில் ஜனாதிபதியாக செயற்படும் பிரதமர் பதவி விலகினால் இப்பிரச்சினை தீர்ந்துவிடும். எனவே, தாக்குதல் நடத்த அனுமதி வழங்க முடியாது என தெளிவாக குறிப்பிட்டோம்.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.
அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அவசர கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை அழைப்பு விடுத்திருந்தார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால், பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் செயற்படுவார். அவர் ஊடாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். எனவே , ஜனாதிபதியின் பதவி விலகல் அமுலுக்கு வரும் முதல் , பிரதமர் பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், இக்கூட்டத்தில் பதில் ஜனாதிபதியாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை. மொட்டு கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். சட்டம், ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் பங்கேற்றிருந்தார்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி.,
” கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வருவதற்கு முன்னர் முப்படை தளபதிகள் பதில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இதன்போது மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், பிரதமர் ரணில் பதவி விலகினால் பிரச்சினை முடிவுக்கு வரும். சபாநாயகருடன் கலந்துரையாடி அப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என நாம் படை தரப்பிடம் குறிப்பிட்டோம்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.
அதேவேளை, சர்வக்கட்சி அரசமைப்பதற்காக ஆளுந்தரப்பும், எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
ஆர்.சனத்
#SriLankaNews
You must be logged in to post a comment Login