யாழ்ப்பாணம் கச்சேரி அருகிலுள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்களை பதிந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்ற நிலையில் தேவையற்ற காத்திருப்பை தவிர்ப்பதற்காக வாகன இலக்கங்களை பதியும் நடைமுறை முதல்கட்டமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பின்பற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இதன்படி ஐஓசி எரிபொருள் நிரப்பபு நிலையத்தில் காத்திருக்கும் முதல் 400 முச்சக்கரவண்டிகள் , 100 கார்கள்,1000 மோட்டார்வண்டிகளின் வாகன இலக்கங்கள் பதியப்பட்டு எரிபொருள் அந்த ஒழுங்கில் வழங்கப்படும்.
அதேவேளை அதற்கு மேலாக நிற்கும் வாகனங்களின் இலக்கம் வாகன உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் என்பன பதியப்பட்டு அவர்களுக்கு அடுத்த முறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும்போது முதல் நாளே குறுஞ்செய்தி சேவை ஊடாக அவர்களுக்கு தகவல் அளிக்கப்படும்.
அதன் பிரகாரம் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் நாளில் அவர்களுக்கு என ஒதுக்கப்படும் நேரத்தில் வந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தேவையற்று காத்திருப்போரை தடுக்க முடியும்.
அத்துடன் ஜீலை முதலாம் திகதிக்கு முன்னர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றவர்கள் இம்முறை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றவர்கள் தற்போது எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாது – என்றார்.
#SriLankaNews
Leave a comment