அரசியல்
குறை நிரப்பு பிரேரணை விவாதம் எதிர்வரும் 8 இல்
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.30 மணிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளைகள் அன்றையதின விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (02) முற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதேவேளை, எதிர்வரும் 07ஆம் திகதி முற்பகல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.09ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ட்ரில்லியன் ரூபாவினால் உயர்த்துவதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட அறிவிப்பொன்று முன்வைக்கப்படவிருப்பதுடன், அது குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
ஜூன் 09ஆம் திகதி இலங்கை மின்சாரம் திருத்தச்சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
அதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
அண்மையில் இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையின் போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணையை ஜூன் 10ஆம் திகதி மு.ப 10 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login